அழகிரி வழக்கு விவகாரமும் விசாரணைகளும்


மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது புகார் தெரிவித்த மதுரை கோட்டாட்சியர் சுகுமாரன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அமைச்சர் அழகிரி மீது பொய் வழக்கு பதிவு செய்யுமாறு ஆட்சியர் தன்னை வற்புறுத்துகிறார், எனவே மதுரை கிழக்கு தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு சுகுமாரன் கடிதம் எழுதியிருந்ததாகவும் அவர் மாவட்டத்தைவிட்டு இடமாற்றம் செய்யப்படவேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது. 

மாநிலத்திலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் பேரில், ஆட்சியர் சகாயத்தின் மீது தவறாகப் புகார் கூறிய குற்றத்திற்காக சுகுமாரன் மீது மத்திய தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டதாகவும் அதன்படி, சுகுமாரன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

'அழகிரி தாக்கவில்லை' -வட்டாட்சியர் காளிமுத்து
இதனிடையே மத்திய அமைச்சர் அழகிரியோ அவரது ஆதரவாளர்களோ தன்னை தாக்கவில்லை எனவும், அழகிரி பங்கேற்ற நிகழ்ச்சியில் பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை விசாரிக்க சென்ற தன்னை கோயிலுக்குள் காலணியுடன் வரக்கூடாது என்று மட்டுமே அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கூறியதாகவும் மேலூர் வட்டாட்சியர் காளிமுத்து கூறியிருக்கிறார். 

முன்னதாக, காளிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரைத் தாக்கியதாக அழகிரி மற்றும் 52 திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அழகிரி உள்ளிட்ட 4 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீனும் பெற்றனர். 

இந்நிலையில் தான் தாக்கப்படவில்லை ஆனால் காவல்துறையினரின் தூண்டுதல் பேரில் தான் அப்படிப் புகார்கொடுத்ததாக தேர்தல் ஆணையத்திற்கு ஃபாக்ஸ் மூலம் காளிமுத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

செய்தி பற்றி விசாரித்து வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
Previous Post Next Post