பட்டாசு வெடிகொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டனர்


கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வெற்றி கொண்டதையடுத்து யாழ்குடாநாட்டில் பட்டாசு வெடிகொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

யாழ்குடாநாட்டில் பல இடங்களில் இவ்வாறான தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வெடிகொளுத்திய பலர் வீதிகளில் குப்பைகளை ஏற்படுத்தியதாக படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் மட்டும் சுமார் 20 பேர்மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

வெள்ளை வேன்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்த ஆயுததாரிகளே பரவலாக இவ்வாறான தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

கிரிக்கெட் போட்டியை உறவினர் வீடுகளில் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து யுத்த வெற்றியுடன் ஒப்பிட்டு இராணுவத்தைச் சார்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் சித்தரித்ததன் விளைவுதான் இதுவெனவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

Previous Post Next Post