உலகக் கோப்பையிலும் மோசடியா?




வழங்கப்பட்ட கோப்பை - காட்சிக் கோப்பை
மும்பை, ஏப்.4: உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அசல் கோப்பை அல்ல என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு வழங்கப்பட்டது போலி கோப்பை என்ற செய்தியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துள்ளது. 
 
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கை:இந்திய அணியிடம் இருப்பது உண்மையான அசல் கோப்பையே. சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்திருப்பது போட்டியை பிரபலப்படுத்துவதற்காக காட்சிக்கு வைக்கப்படும் கோப்பை. அசல் கோப்பையில் உலகக் கோப்பை 2011 என்ற இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்டிருக்கும். பார்வைக்கு வைக்கப்படும் கோப்பையில் எந்த இலச்சினையும் இருக்காது.ஊடகங்களில் வெளியான செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் இறுதி ஆட்டத்துக்கு பின்னர் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை அசல் கோப்பைதான். அந்த கோப்பை தான் இதுவரை வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. கோப்பை போலியா என்ற கேள்விக்கே இடம் இல்லை. 
 
சுங்கத்துறையிடம் இருக்கும் காட்சிக் கோப்பை சுங்கத்துறையிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டு துபையில் ஐசிசியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் இருக்கும் கோப்பை அசல் கோப்பையா அல்லது போலி கோப்பையா என்பது தெரியாது. 
 
எங்களுக்கு கட்ட வேண்டிய 35 சதவீத வரி கட்டப்பட்டவுடன் கோப்பை திருப்பி வழங்கப்படும் என சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை போலியானது. அசல் கோப்பை சுங்கத்துறையிடம் உள்ளது. கோப்பையை துபையில் இருந்து மும்பைக்கு கொண்டு வந்ததற்கு சுங்கவரி கட்டாததால் சுங்கத்துறையினர் கோப்பையை பறிமுதல் செய்து வைத்துள்ளனர் என செய்திகள் வெளியாயின.
 
இந்த தகவலால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக முன்னாள் இந்திய வீரர்கள் ஐசிசி மீது குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக ஐசிசி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் மீது குற்றம்சாட்டினார் முன்னாள் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத். ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் ஐசிசி ரூ.22 லட்சம் வரியை செலுத்த மறுப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையுடன் இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் படம் எடுத்துக் கொண்டார். இந்திய வீரர்களும் இந்தியா கேட், மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் கோப்பையுடன் படம் எடுத்துக் கொண்டனர். 
 
கோப்பையை முத்தமிடுவது போன்றும் அவர்கள் படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்த மோசடிகள் முடிவுக்கு வராத நிலையில், இப்போது உலகக் கோப்பையிலேயே மோசடி செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post