வாக்காளர்களுக்கு பட்டுவாடா: பஸ்சில் ரூ.5 கோடி பணம் சிக்கியது


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வாக்காளர்களை கவரும் கடைசி கட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு அவர்கள் பணம் கொடுக்கலாம் என்று புகார்கள் எழுந்துள்ளதால் அதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

துணைநிலை ராணுவம், வட மாநில போலீசார் கொண்ட பறக்கும் படையினர் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனைகளின் பயனாக இதுவரை ரூ. 30 கோடிக்கு மேல் பிடிபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வாகன சோதனையை பறக்கும் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட முக்கிய நகரங்களில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடந்து வருகிறது. இதனால் உஷாராகியுள்ள அரசியல் கட்சியினர் கட்டு, கட்டாக பணத்தை ரெயில், பஸ் மூலம் கொண்டு செல்ல தொடங்கி உள்ளனர். இதையும் பறக்கும் படையினர் கண்காணித்து திடீர் என சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி உதவி கலெக்டரும் திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான சங்கீதாவுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் பொன்னகரில் ஒரு தியேட்டர் பின்புறம் உள்ள ரோட்டில் ஒரு ஆம்னி பஸ் நிற்பதாகவும் அதில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். உடனே சங்கீதா உஷார் ஆனார். தனது ஜீப்பில் உதவிக்கு ஒரு போலீஸ் காரரை மட்டும் அழைத்துக் கொண்டு பொன்னகர் சென்றார்.

அங்கு ஒரு ஆம்னி பஸ் நின்றது. அதன் மேலே தார் பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. உடனே சங்கீதா போலீஸ்காரரிடம் அதில் என்ன இருக்கிறது என சோதனை போட உத்தரவிட்டார். போலீஸ்காரர் பஸ்சின் மீது ஏறி தார்பாயை பிரித்து பார்த்தபோது உள்ளே 5 டிராவல்ஸ் பேக்குகள் இருந்ததை பார்த்தார். அந்த பைகளுக்குள் கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பணம் இருப்பதை உதவி கலெக்டர் சங்கீதாவிடம் கூறினார்.

இதை தொடர்ந்து தேர்தல் அதிகாரி சங்கீதா இதுகுறித்து கண்டோன்மெண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு கண்டோண்மெண்டு உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் சிகாமணி மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் பஸ்சில் இருந்த 5 பண பைகளையும் கீழே இறக்கி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். 5 மூட்டைகளிலும் மொத்தம் 5 கோடியே 11 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அவை அனைத்தும் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தன.

பஸ் உரிமையாளரின் வீடு பணம் எடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதற்கிடையே பஸ்சில் ரூ. 5 கோடி பணம் சிக்கியதும் அது தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என்ற தகவலும் அரசியில் கட்சியினருக்கு தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும், மேற்கு தொகுதி பொறுப்பாளருமான வக்கீல் முருகய்யன், தே.மு.தி.க. கவுன்சிலர் ஜோசப் ஜெரால்டு, பொன்னர் முரளி, வேலுப்பிள்ளை மற்றும் கட்சியினர் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி 25 கருப்பு படை போலீசாரும், கூடுதல் கண்டோண்மெண்டு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பஸ் உரிமையாளர் வீட்டில் உதவி கலெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டுக்குள் பணம் எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமார், மேலாளர் பாலு, பஸ் உரிமையாளரின் மகன் ஆகிய 3 பேரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். முதலில் பணம் ஒரு கிராமத்தில் இருந்து பணம் எடுத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.

பிறகு அந்த பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள பணம் என்றும், வருமான வரி துறை, அதிகாரிகளுக்கு பயந்து பணத்தை பஸ்சில் மறைத்து வைத்ததாக 3 பேரும் கூறினர்.   இதைத் தொடர்ந்து உதயகுமார் பாலு ஆகியோர் கண்டோன்மெண்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் உண்மையிலேயே ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த பணமா அல்லது திருச்சியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணமா என விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது பெருநாழி கிராமம். இது முதுகுளத்தூர் தொகுதியில் அடங்கியது ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது40). இவர் வீட்டோடு டீக்கடை வைத்திருக்கிறார். இந்த கடையில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரிவு பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த டீக்கடைக்கு சென்று சோதனை செய்தனர்.   கடைக்குள் ரூ.40 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அந்த பணத்தை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை பாண்டியனால் சொல்ல முடியவில்லை.

இதனால் வாக்காளர்களுக்கு கொடுக்கவே அதை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகள் கருதினார்கள். கமுதி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் போலீசார் டீக்கடையில் இருந்த ரூ. 40 லட்சம் பணத்தை கைப்பற்றி கமுதி சார் கருவூலக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதோடு பாண்டி, அவரது தாய் மாடாத்தி (55) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Previous Post Next Post