இலங்கையில் உள்ள தீவு இந்தியாவுக்கு விற்பனை; பசில் ராஜபக்சே தகவல்


இலங்கையில் கற்பிட்டி பிரதேசத்தில் வெள்ளைத் தீவு, ஈச்சத்தீவு உள்பட பல சிறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக பிரச்சினை கிளப்பப்பட்டது. இலங்கைக்கு சொந்தமான தீவுகள் எந்தெந்த    நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், பொருளாதார அபிவிருத்தி மந்திரியுமான பசில் ராஜபக்சே பதில் அளித்தார். அப்போது அவர், "கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள 3 தீவுகள் இந்தியா, சுவிட்சர்லாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன'' என்றார்.

பாராளுமன்றத்துக்கு அது பற்றி ஏன் தெரிவிக்கப்படவில்லை என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது பசில் ராஜபக்சே பதில் சொல்லவில்லை.

இலங்கை பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெறாமலே இலங்கை தீவுகளை ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு விற்பது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளது. குத்தகை அடிப்படையில் இந்த தீவுகள் விற்பனை நடந்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளிடம் இருந்து பல கோடி ரூபாய் இலங்கைக்கு கிடைக்கும். இதற்காக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, 30 ஆண்டுகளுக்கு இந்த தீவுகளை வெளிநாடுகளிடம் இருந்து இலங்கையால் திரும்ப பெற முடியாது.  
Previous Post Next Post