சோமாலியா கடற்கொள்ளையர்களின் பிடியில் ஆறு மாதங்களாக தவித்து வருகின்றனர் ஆறு இந்தியர்கள். அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல், மத்திய, மாநில அரசுகள் முகத்தை திருப்பி கொண்டிருக்கின்றன.
சோமாலியா கடல் வழியே சென்று வரும் கப்பல்களை, அந்நாட்டை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து, அதில் உள்ளவர்களை பிணைய கைதிகளாக வைத்திருப்பதும், அவர்களை விடுவிக்க பெருந்தொகை கோருவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சோமாலியா கொள்ளையர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படை கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால், சோமாலியா கடற்படையின் அட்டகாசம் சிறிது நாள் குறைந்திருந்தது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு ஒரு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும், 30க்கும் மேற்பட்ட கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். கடத்திய கப்பல்களின் உரிமையாளர்களிடம் கப்பலுக்கு தகுந்தபடி குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி, பேரம் படிந்து தொகை கிடைத்தால் மட்டுமே கப்பல்களை விடுவிப்பர். இப்படி பல கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இது போல் பலமுறை, சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 2ம் தேதி, "எம்வி சூயஸ்' என்ற கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. எகிப்து நாட்டின், "ரெட் சீ நவிகேஷன்' நிறுவனத்திற்கு சொந்தமான இக்கப்பல், எகிப்தில் இருந்து பாகிஸ்தானிற்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற போது, நடுவழியில் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டது.
இக்கப்பலில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி கிராமம் சலேட் நகரை சேர்ந்த இன்பான்ட் விஜூ (23), சர்மா - ஜம்மு, பிரசாந்த் - சிம்லா, ரவீந்திரா - அரியானா, சச்சின் - மும்பை, சத்னாம்சிங் - அம்பாலா ஆகிய ஆறு இந்தியர்கள் உட்பட 23 பேர் சிக்கியுள்ளனர். கப்பலை விடுவிக்க, சோமாலியா கடற்கொள்ளையர்கள், எகிப்தை சேர்ந்த கப்பல் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி, 18 கோடி அமெரிக்கன் டாலர் கோரியுள்ளனர்.
ஏற்கனவே, அதே நிறுவனத்திற்கு சொந்தமான வேறு ஒரு கப்பல் கடத்தப்பட்ட போது, "15 லட்சம் டாலர் மட்டுமே கொடுக்கப்பட்டதால், அந்த அளவு தொகை மட்டுமே தர முடியும்' என, கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, கொள்ளையர்கள் ஒப்புக் கொள்ளாமல் போகவே, கொள்ளையர்கள் கப்பலை விடுவிக்கவில்லை.
ஏற்கனவே, அதே நிறுவனத்திற்கு சொந்தமான வேறு ஒரு கப்பல் கடத்தப்பட்ட போது, "15 லட்சம் டாலர் மட்டுமே கொடுக்கப்பட்டதால், அந்த அளவு தொகை மட்டுமே தர முடியும்' என, கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, கொள்ளையர்கள் ஒப்புக் கொள்ளாமல் போகவே, கொள்ளையர்கள் கப்பலை விடுவிக்கவில்லை.
எகிப்து நிறுவனமும் கப்பலை விடுவிக்க வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய தூதரகத்திற்கும், கப்பல் துறை, வெளியுறவு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மத்திய அரசோ, "இது பற்றி எகிப்து அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அப்படி வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்' என, கையை விரித்து விட்டது. எகிப்தில் மக்கள் புரட்சி நடந்து குழப்பமான சூழல் நிலவி வரும் வேளையில் அந்த அரசிடம் இருந்து மத்திய அரசு தகவலை எதிர்பார்ப்பது ஏனோ தெரியவில்லை.
இது குறித்து, கடத்தப்பட்ட விஜூவின் சகோதரர் ஜெரால்டு தனக்கு கிடைத்த "இ-மெயில்' தகவல் அடிப்படையில் கூறியதாவது:கப்பல் கடத்தப்பட்டு ஆறு மாதங்களாகி விட்டதால், கப்பலில் இருந்த உணவுகள் தீர்ந்து, அதில் உள்ள ஊழியர்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 22ம் தேதியன்று, "இன்னும் ஐந்து நாட்களில் நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால், அனைவரையும் கொலை செய்து விடுவோம்' என, கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக உணவும் தரவில்லை. இதனால், உயிர் பறிபோய் விடும் பீதியில் அனைவரும் தவித்து போயுள்ளனர். இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசும், இந்திய அரசும் இந்த பிரச்னையில் தலையிட்டு, கப்பலில் சிக்கி தவிக்கும் அனைவரையும் மீட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Crime
