2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் குறித்து அனில் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
2ஜி அலைக்கற்றைக்கான புதிய உரிமம் கோரி ஸ்வான் டெலிகாம் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அந்த நிறுவனத்தில் 9.9 சதவீத முதலீட்டை அனிலின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக அனில் அம்பானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிபிஐ தரப்பில் இருந்து எந்தவித சம்மனும் அனில் அம்பானிக்கு அனுப்பப்படவில்லை. வாரம்தோறும் அவர் தில்லி செல்வது வழக்கம்.
அத்தகைய தில்லி பயணத்தின்போது, இன்று அவர் சிபிஐ அதிகாரிகளை சந்தித்து தொலைத்தொடர்புத்துறை தொடர்பாக நடைபெற்றுவரும் தற்போதைய விசாரணையில் கலந்துகொண்டு விளக்கம் அளித்தார். 2008 ஜனவரி மாதம் ஸ்வான் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்துக்கு 2ஜி உரிமம் வழங்கப்பட்டபோதும் அதன் பின்னரும் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு கூட அனில் அம்பானி குழுமத்திடமோ அதன் தொடர்புடையவர்களிடமோ இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பால்வா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிபிஐ கட்டுப்பாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்வான் டெலிகாம் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றம் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
Tags:
Correption