லிபியாவில் ஒரு வெளிநாட்டுத் தனியார் நிறுவனத்துக்காக வேலைக்கு சென்றிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறந்ததன் காரணம் தொடர்பில் குழப்பம் நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுக்கா, தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 30 பேர் ஹுயுண்டாய் நிறுவனத்துக்காக லிபியாவில் வேலைபார்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் முருகையா என்பவர் இறந்திருப்பதாகவும் அசோக் குமார் என்பவர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இது தொடர்பில் தமிழோசையிடம் பேசிய தலைவன்கோட்டை பஞ்சாயத்துத் தலைவர் பூசைப்பாண்டியன், " முருகையாவுடன் லிபியாவில் வேலைபார்த்த அவரது உறவினர் செந்தில்குமார் என்பவர் தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து, தாம் தங்கியிருந்த இடத்திற்கு தீவிரவாதிகள் வந்து இடத்தை காலி செய்யச் சொன்னார்கள் என்றும், அப்போது தப்பித்து வெளியேறிக்கொண்டிருந்தபோது அவர்கள் நடத்திய தாக்குதலில் குண்டடி பட்டு முருகையா இறந்து விட்டா, அசோக் குமார் என்பவர் காயமடைந்துள்ளார் என்றும் தகவல் தந்துள்ளார்." எனத் தெரிவித்தார்.
ஆனால் செந்தில்குமாரின் மனைவியை இது சம்பந்தமாகத் தொடர்புகொண்டு கேட்டபோது, தனது கணவர் தன்னை தொலைபேசியில் அழைத்தபோது, முருகையா இறந்துவிட்டார், அசோக்குமார் காயமடைந்துவிட்டார் என்ற விபரத்தை மட்டும்தான் சொன்னார் அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்ற விபரத்தை அவர் சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முருகையாவின் மனைவியும் தலைவன்கோட்டை கிராமவாசிகளும் கொடுத்த மனுவின் அடிப்படையில், முருகையாவின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவரவும், ஏனைய தமிழர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தமிழோசையிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்தார்.
ஆனால் இந்த விஷயம் குறித்து தற்போது இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், லிபியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த முருகையா உட்பட மூன்று இந்தியர்களும் இரண்டு எகிப்தியர்களும் பிப்ரவரி 19ம்தேதி ஒரு காரில், லிபியாவின் வடகிழக்கு நகரான டொப்ருக் நகரிலிருந்து எகிப்துக்குள் செல்ல முயன்றதாகவும், அப்போது நடந்த ஒரு கார் விபத்தில் மூன்று இந்தியர்களும் பலத்த காயமடைந்ததாகவும், காயமடந்த அவர்கள் அல்வட்னம் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டதாகவும், இந்த மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 21ம் தேதி முருகையா இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்ற இந்தியர்கள் இன்னும் காயமடைந்த நிலையில்,
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அது கூறுகிறது.
முருகையா குண்டுத் தாக்குதலில் இறந்தார் என்ற செய்தி தவறானது போல் தோன்றுவதாக அச்செய்திக்குறிப்பு கூறுகிறது.
நன்றி-பிபிசி
Tags:
Correption