அமெரிக்க பல்கலை ஒன்று, இந்திய மாணவர்களுக்கு போலி விசா அளித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அந்த பல்கலை இழுத்து மூடப்பட்டுள்ளது. அதில் படித்த 1,500 மாணவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும், அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள், எப்-1 என்ற கல்வி விசாவை பெற வேண்டும். இதை பெறுவதற்காக இந்திய மாணவர்கள் ஏராளமான பணத்தை செலவிடுகின்றனர். சில நேரங்களில் இதற்காக லஞ்சமும் கொடுக்கின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ட்ரி-வாலி என்ற பல்கலையில், ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பல்கலை நிர்வாகம், பெருமளவு பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு போலி விசாவை வழங்கியது, அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 1,555 மாணவர்கள் மீது, போலி விசா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவர்கள் சட்ட விரோதமாக விசா பெறுவதற்கு, இந்த பல்கலை நிர்வாகம் உதவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பல்கலையில் படிக்கும் பல மாணவர்கள், விதிமுறைகளை மீறி, மேரிலாண்ட், விர்ஜினியா, டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மாணவர்களுக்கு சம்பந்தபட்ட பல்கலை சார்பில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கிரவுலி கூறியதாவது: இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு பின், வெளிநாடுகளில் இருந்து படிக்கும் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த கண்காணிப்பில் தான், ட்ரி-வாலி பல்கலையில் படிக்கும் மாணவர்கள் போலி விசா மூலம், இங்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது
.
சம்பந்தபட்ட மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். குற்றம் செய்துள்ளது தெரியவந்தால், அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார். மோசடி வேலையில் ஈடுபட்ட பல்கலை மூடப்பட்டுள்ளது. கல்வி விசா பெற்று, அமெரிக்காவுக்கு வரும் மாணவர்கள், தங்களின் விசாவின் தன்மை குறித்து உறுதி செய்த பின்னரே இங்கு வர வேண்டும். இதுபோன்ற போலி விசா சம்பவங்கள் அரசுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு கிரவுலி கூறினார்.
Tags:
Crime