இந்தியாவில் அரசியல் உறுதிப்பாடு இருந்தால் நாட்டிலிருந்து வெளியே சென்ற கருப்புப் பணத்தை மீண்டும் கொண்டுவர முடியும் என வருமானவரித்துறை வல்லுநர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டிருப்பது தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.கணக்கில் வராத பணம், கருப்புப் பணமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவது நாட்டை கொள்ளையடிப்பதற்கு சமம் என்று இந்திய உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருந்தது.
சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வர முடியும் என இந்தியாவின் வருமானவரித்துறையின் முன்னாள் தலைமை ஆணையர் டி சி ஏ ராமானுஜம் தெரிவித்தார்.
பன்னாட்டு வர்த்தகம், ஹவாலா, போதைப் பொருட்கள் கடத்தல் என்று பல வழிகளில் கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்கிறது எனவும் அவர் கூறுகிறார்.
இதுவரை இந்தியாவிலிருந்து எவ்வளவு கருப்புப் பணம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து யாரிடமும் எந்த கணக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முறைகேடான வகையில் பண பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளதாக என்று அரசு நிரூபிக்குமானால் கருப்புப் பணம் தொடர்பான சர்வதேச விதிமுறைகளின்படி அக்குறிப்பிட்ட பணம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய கடப்பாடு சர்வதேச வங்கிகளுக்கு உள்ளது என்றும் ராமானுஜம் தெரிவிக்கிறார்.
வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமான வகையிலேயே பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் மூலம் இந்தியா நிரூபிக்குமானால் அந்த நாடுகள் அப்பணத்தை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
சட்ட விரோதமான வகையில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்த விடயத்தில் இதுவரை இந்தியாவில் யாரும் பெரிய அளவில் தண்டிக்கப்படவில்லை என்று கூறும் அவர் அதற்கு அரசின் உறுதிப்பாடு இன்மையே காரணம் எனவும் கருத்து வெளிகிடுகிறார்.
Tags:
Correption
