மத்திய அரசில் இருந்து விலகல்: தி.மு.க. மந்திரிகள் நாளை ராஜினாமா; பிரதமரிடம் கடிதம் கொடுக்கிறார்கள்



காங்கிரஸ் கட்சியுடன் சுமூகமான தொகுதி பங்கீடு ஏற்படாததால் மத்திய அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. நேற்று அறிவித்தது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் தி.மு.க.வின் இந்த திடீர் முடிவு, தமிழ் நாட்டில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கத்தில் இருந்தே சுமூகமான பாதையில் செல்லவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அதிக தொகுதிகளை கேட்டது மட்டுமின்றி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க. விரும்ப வில்லை. என்றாலும் கூட்டணி தர்மத்துக்காக 60 இடங்கள் வரை கொடுக்க தி.மு.க. முன் வந்தது. அதன் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தொகுதிகளை, தாங்களே நிர்ணயித்து கொள்வோம் என்று கூறியது விரிசலை உறுதிப்படுத்துவது போல ஆகி விட்டது.

தி.மு.க.வின் திடீர் விலகல் முடிவு காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் இது தொடர்பாக அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கின்றனர். டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அதில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

தி.மு.க. விடம் மீண்டும் பேச தூதர் அனுப்புவது குறித்தும் அவர்கள் எந்த முடிவும் எடுக்க வில்லை.   தி.மு.க.- காங்கிரஸ் இடையே இனி சுமூக உறவு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று இரு கட்சிகளிலும் உள்ள சில தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி இதர 4 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காகவே, திட்ட மிட்டு தி.மு.க.விடம் இருந்து விலகி உள்ளதாக தி.மு.க. வினர் கருதுகிறார்கள். எனவே மத்திய மந்திரி சபையில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவில் தி.மு.க.வும் உறுதியான நிலை பாட்டுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான 7 ஆண்டு கூட்டணி முறிவுக்கு வரும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.   காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் தி.மு.க. சார்பில் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நெப்போலியன், காந்தி செல்வன், தயாநிதி மாறன், ஆகிய 6 பேர் மந்திரிகளாக உள்ளனர். இவர்கள் 6 பேரும் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) காலை அவர்கள் டெல்லி செல்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

இன்று விடுமுறை நாள். எனவே தி.மு.க. மந்திரிகள் தங்கள் விலகல் கடிதத்தை நாளை (திங்கள்) கொடுப்பார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலுவும் உறுதிப்படுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

காங்கிரஸ் தரப்பில் இருந்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இதுவரை யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. எனவே நாங்கள் ஏற்கனவே முடிவு எடுத்தப்படி மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகுகிறது. தி.மு.க. மந்திரிகள் 6 பேரும் நாளை (திங்கள்) ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுப்பார்கள். நாங்கள் (தி.மு.க.-காங்கிரஸ்) எல்லாரும் நல்ல நண்பர்களாக உள்ளோம். எனவே அவர்களது முடிவு பற்றி நாங்கள் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

டி.ஆர்.பாலுவிடம் நிருபர்கள், காங்கிரஸ் தரப்பில் மீண்டும் தொடர்பு கொண்டால் தி.மு.க. முடிவு மறு பரிசீலனை செய்யப்படுமா? என்று கேட்டனர். அதற்கு டி.ஆர்.பாலு யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார். இதன் மூலம் தி.மு.க. விலகுவது உறுதியாகி விட்டது.   தி.மு.க.விலகலால் மத்திய மந்திரி சபைக்கு எந்த ஆபத்தும் இல்லை. தற்போதைய நிலையில் மெஜாரிட்டிக்கு தேவையான 272 எம்.பி.க்களை விட கூடுதலாக சுமார் 30 எம்.பி.க்கள் ஆதரவு காங்கிரசுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தி.மு.க. விலகலை காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்கவில்லை. அதற்கு மாறாக தி.மு.க. மந்திரிகள் 6 பேரின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் உடனே ஏற்றுக் கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 6 மந்திரிகள் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டு உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார் என்று கூறப்படுகிறது.  

இடைப்பட்ட 48 மணி நேரத்துக்குள் ஏதாவது (திருப்பங்கள்) நிகழ்ந்தால் மட்டுமே தி.மு.க.-காங்கிரஸ் இடையே சுமூக உறவு ஏற்படலாம். ஆனால் தமிழ் நாடு முழுவதும் தி.மு.க.- காங்கிரஸ் தொண்டர்கள் மட்டத்திலும் விரிசல் ஏற்பட்டு விட்டதால் தி.மு.க. -காங்கிரசின் 7 ஆண்டு உறவுக்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டதாக இரு கட்சியினரும் கருதுகிறார்கள்.
Previous Post Next Post