லிபிய ராணுவ டாங்குகளுக்கு எதிராக வான் தாக்குதல் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கை எடுக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஐநா சபையில் இதுதொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது.
லிபியாவில் போராட்டக்காரர்களின் தலைநகரான பெங்காஸிக்கு 100 மைல் தொலைவுக்குள் கடாஃபியின் படைகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் பொதுமக்களைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் வாக்கு உள்பட 10 வாக்குகளுடன் அந்த தீர்மானம் நிறைவேறியது. ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வான் வழித்தாக்குதல் மற்றும் கப்பல்களில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம் அனுமதிக்கிறது.
ஐநா சபையில் இந்த தீர்மானம் நிறைவேறிய தகவல் அறிந்ததும், பெங்காஸியில் மக்களிடையே கொண்டாட்டம் வெடித்துள்ளது.
வாக்கெடுப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து நடவடிக்கை எடுக்க சாத்தியமுள்ள வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஆகியோரிடமும் தொலைபேசி மூலம் ஒபாமா ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன
Tags:
World