எஸ். பாண்டு அலைக் கற்றை முறைகேடு புகாரைத் தொடர்ந்து “இஸ்ரோ” தலைவர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக இருப்பவர் கே. ராதாகிருஷ்ணன். இவர் விண்வெளித்துறையின் செயலாளராகவும், விண்வெளி கமிஷனின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் இஸ்ரோவின் எஸ். பாண்டு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தெரிவித்து இருந்தது. இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு எஸ். பாண்டு அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தது. இதில் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதுபற்றி உயர்மட்டக் குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக 2 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திட்ட கமிஷன் உறுப்பினர் சதுர்வேதி, விண்வெளி கமிஷனர் உறுப்பினர் ரோத்தம் நரசிம்மா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் ஒரு மாதத்தில் விசாரணையை முடித்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனது துறை மீது மிகப்பெரிய அளவுக்கு குற்றச்சாட்டு கூறியிருப்பதால் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் வருத்தம் அடைந்து உள்ளார். இதையடுத்து அவர் இஸ்ரோ தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். ஆன்டி ரிக்ஸ்-தேவாஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் பற்றி மந்திரிசபை தனக்கு தெரிவிக்கவில்லை என்று சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது மந்திரிசபையில் இந்த ஒப்பந்தம் பற்றி பேசப்படவில்லை.
பிரதமர் அலுவலக மந்திரியாக இருந்த பிரிதிவிராஜ் சவானுக்கும் இதுபற்றி தெரியாது. துறை ரீதியான அளவிலேயே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்த ஒப்பந்தம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதை தேவாஸ் நிறுவனம் வரவேற்பதாக தெரிவித்து உள்ளது.
Tags:
Correption