கடலோர நிலப்பகுதிகளை வாங்க ஜப்பான் முடிவு


நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடலோரத்தில் உள்ள நிலப்பகுதிகளை அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளுடன் வாங்கிக் கொள்ள ஜப்பானிய அரசு பரிசீலித்து வருகிறது.

ஆழிப் பேரலையால் தங்களுடைய வீடுகளை இழந்தவர்களுக்கு, சற்றே உயரமான நிலப்பகுதியில் புதிய வீடுகளைக் கட்டித்தரவும் அரசு உத்தேசித்து வருகிறது.கடலோரப் பகுதியில் வீடுகளையும் இதர குடியிருப்புகளையும் கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும் ஏற்கெனவே கட்டியவர்களின் வீடுகளை இடித்துவிட்டு அந்த இடங்களைப் பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் திட்டம் தயாராகி வருகிறது.இதை எந்த அளவுக்கு மக்கள் வரவேற்பார்கள் என்று அரசுக்குத் தெரியவில்லை.

வீடுகள் சற்றே உயரமான இடங்களில் கட்டப்பட வேண்டும் என்று இப்போது பெரும்பான்மையானவர்கள் நினைக்கின்றனர். எனவே உயரமான இடங்களுக்குக் குடியிருப்புகளை மாற்றிவிட திட்டம் தயாராகிவருகிறது.ஆழிப்பேரலை தாக்கிய மார்ச் 11-க்கு முன்னால் இந்தப் பகுதியில் நிலத்துக்கு என்ன மதிப்பு இருந்ததோ அதே மதிப்பில் நிலங்களை வாங்கிக்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.

அனைவரையும் ஒட்டுமொத்தமாக வீட்டைக் காலிசெய்துவிட்டுப் புதிய இடங்களில் குடியேறுங்கள் என்று சொன்னால் வேதனை அடைவார்கள் என்பதால் மக்களின் ஒத்துழைப்புடன் இதைச் செய்ய அரசு நினைக்கிறது. அரசு ஒதுக்கும் இடங்களில் வீடுகளைக் கட்டுவோருக்கு நாலில் மூன்று பங்குச் செலவு மானியமாகவே தரப்படும் என்று தெரிகிறது.

அதே வேளையில் கடலோரப் பகுதியில் அரசு மீட்கும் நிலப் பகுதிகளில் வீடுகளையும் வர்த்தக நிறுவனங்களையும் கட்டாமல் பொதுமக்கள் பயன்படுத்த பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.கடல் பொங்கி தரை மீது வரும்போது எத்தகைய சேதத்தை ஏற்படுத்துகிறது, கடல் நீர் என்ன வேகத்தில் வருகிறது, அது கொண்டுவரும் கசடுகளாலும் வண்டல்களாலும் நிலப்பரப்புக்கும் நிலத்தடி நீருக்கும் என்ன நேருகிறது என்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. எனவே ஜப்பான் கொண்டுவரவுள்ள புதிய குடியிருப்பு திட்டம் இதற்கெல்லாம் விடை காண்பதாக இருக்கும்.

கடலோரத்தில் வீடுகளைக் கட்டியவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு இடம் போக விரும்பவில்லை என்றால் அந்த இடத்தையே மேம்படுத்தி, அந்த வீடுகளிலேயே சில மாற்றங்களைச் செய்து அவர்களை அங்கேயே மீண்டும் குடியமர்த்தவும் அரசு திட்டம் வைத்திருக்கிறது.
Previous Post Next Post