அமெரிக்காவின் கூட்டு படைகள் நேற்று அதிகாலை ராணுவ தாக்குதலை தொடங்கின. பிரான்சின் ஜெட்போர் விமானங்கள் பெங்காசி நகரின் முக்கிய ராணுவ நிலையங்களை குறிவைத்து குண்டு வீசி தாக்கின. அதேபோன்று அமெரிக்காவின் கூட்டு படைகள் திரிபோலி, மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகளை வீசின. அதில் போர் விமானங்கள் மற்றும் ராணுவடாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன.
ஏவுகணை தாக்குதலில் இதுவரை 65 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர். இருந்தும் திரிபோலி, சிர்தே, ஜீவாரஹ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று இரவு அமெரிக்கா கூட்டுப்படையில் திரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் 4 அடுக்கு மாளிகையை குறி வைத்து ஏவுகணைகளை வீசி தாக்கின. அதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இது கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்து வந்தது. இங்குதான் அவர் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அமெரிக்க தாக்குதலில் இருந்து கடாபியை காப்பாற்ற அவரது ஆதரவாளர்கள் மனித கேடயமாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த ஏவுகணை தாக்குதலில் அவர்களில் பலர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதற்கிடையே போர் நிறுத்தம் அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருவதாக லிபியா அரசு தெரிவித்துள்ளது.
அதை அமெரிக்கா மறுத்துள்ளது. அது உண்மையில்லை. இன்னும் அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் தெரிவித்துள்ளார்.
Tags:
World