பஹரைன் நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிஃபாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்துவரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் ஷியா முஸ்லிம்கள், ஒருவர் சன்னி முஸ்லிம் தலைவர். ஹக் இயக்கத்தைச் சேர்ந்த ஹஸன் முஷைமா, வாஃபா இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் ஹுசைன், சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இப்ராஹிம் ஷரீஃப் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர்.
அவர்கள் மட்டும் இன்றி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முக்கியத் தொண்டர்கள், பேச்சாளர்களும் கைது செய்யப்பட்டனர். ராணுவத்தினர் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று கதவைத் தட்டி தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பிக் கைது செய்தனர் என்று அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் புதன்கிழமை கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் திரண்டிருந்த முத்து சதுக்கத்தை ராணுவத்தின் கவசப் படைகளும் டாங்குப் படைகளும் திடீரென சுற்றி வளைத்து நெருக்குதல் தந்து கைது செய்து அப்புறப்படுத்தின. அப்போது சிறிது பலப்பிரயோகம் செய்யப்பட்டது என்று தெரியவருகிறது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மூடியிருந்தன.
மக்களை ஒடுக்குவதை விட்டுவிட்டு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்குங்கள் என்று சர்வதேச அளவில் மன்னருக்கு நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பஹரைனில் 5.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 70% பேர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஷியாக்களை ஒடுக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அரசிலிருந்து சுகாதார அமைச்சர் நிசார் பஹர்ணா ராஜிநாமா செய்துவிட்டார். அவரும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்.
மன்னரின் நடவடிக்கை பிடிக்காமல் 12 ஷியா பிரிவு நீதிபதிகளும்கூட தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டனர். பஹரைனில் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கிளர்ச்சி பிப்ரவரி மாத மத்தியவாக்கில் தொடங்கியது. இதை ஒடுக்க இப்போது நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இது 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் நலம்: பஹரைன் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தியர்கள் எண்ணிக்கை 3 லட்சமாகும். அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர் என்று மனாமாவில் உள்ள இந்தியர் ஒருவர் பி.டி.ஐ. நிருபருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார். அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் சிலர் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களைக் கல்லால் அடித்து விரட்டினர். ஆனால் இந்தியர்கள் அவ்வாறு இதுவரை தாக்கப்படவில்லை என்று தெரிகிறது.
Tags:
World
