ரயிலில் இருந்து கீழே தள்ளி இளம்பெண் பலாத்காரம்


திருவனந்தபுரம் : ரயிலில் தனியாக பயணம் செய்த இளம்பெண்ணை கீழே தள்ளி விட்டு பலாத்காரம் செய்த கோவை வாலிபரை கேரள போலீசார் கைது செய்தனர். கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள சொரனூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கொச்சியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளம் சொரனூர் பயணிகள் ரயிலில் வீட்டுக்கு சென்றார். கடைசியாக உள்ள பெண்கள் பெட்டியில் அமர்ந்திருந்தார். முள்ளூர்கரை நிலையத்தை ரயில் அடைந்தபோது அந்த பெட்டியில் இருந்த அனைவரும் இறங்கி விட்டனர். தனியாக பயணம் செய்ய அச்சமாக இருந்ததால், அந்த பெண் மற்றொரு பெட்டியில் ஏறினார்.

முள்ளூர்துறை நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நின்றபோது, அந்த பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறினார். பெண்ணை தொந்தரவு செய்தபடி இருந்தார். தொல்லை பொறுக்க முடியாத இளம்பெண் அவரை கண்டித்தார். வள்ளத்தூர் நிலையத்தை தாண்டி ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது பெண்ணை அந்த வாலிபர் திடீரென வெளியே தள்ளி விட்டார். பின்னர், அவரும் கீழே குதித்தார். கீழே தள்ளப்பட்டதால் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை, வாலிபர் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே, ரயிலில் இருந்து 2 பேர் குதித்ததை பார்த்த பயணி ஒருவர், சொரனூர் நிலையத்தை ரயில் அடைந்ததும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது படுகாயத்துடன் இளம்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் நிர்வாண நிலையில் இருந்தார்.போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரித்த போலீசார், பலாத்காரம் செய்த வாலிபரை வடக்காஞ்சேரி பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கோவை பெரியநல்லூரை சேர்ந்த சார்லி (30) என தெரிய வந்தது. அவருக்கு ஒரு கை ஊனமாக உள்ளது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Previous Post Next Post