அரசியல் நாகரிகம் இல்லாத தமிழகம்: கருணாநிதி வேதனை ? !


தமிழகத்தில் அரசியல் நாகரிகம் நலிந்தும், நசிந்தும் போய் விட்டதாக முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.  மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவாவின் இல்லத் திருமண விழாவை, சென்னையில் திங்கள்கிழமை நடத்தி வைத்து அவர் பேசியது: காலையில் எழும்போதே உடல் நலிவோடு எழுந்து இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியுமா என்ற சந்தேகத்தோடு மருத்துவர்களை அழைத்து, சிகிச்சை பெற்றுக் கொண்டேன்.  எப்படியும் இந்த மண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டே தீர வேண்டுமென்ற உந்துதலோடு உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை பெற்று இருக்கின்றேன்.  

ஜீவா தமிழகத்தில் உயிர்நாதமாக ஒரு காலத்திலே விளங்கி இன்றைக்கும் அவர் அன்றைக்கு விதைத்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி அந்த ஆலமரத்தின் விழுதின் கீழ் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி வாழ்கின்றவர்கள் சிலரை நான் இங்கே காண முடியவில்லை.  

ஜீவாவின் குடும்பத்திலே இன்று நேற்றல்ல, நீண்ட நாட்களாக எனக்கு உள்ள பற்றும், இந்த குடும்ப விழா பலவற்றில் நான் கலந்து கொண்டதையும் நன்றாக அறிவீர்கள்.  குடும்பத்தை தாங்கிப் பிடிப்பார்கள்...

ஆனால், ஒரு விஷயத்துக்காக உள்ளபடியே நான் வருத்தம் கொள்கிறேன். ஒரு பெரிய தலைவர் தன்னால் உருவாக்கப்பட்ட பல தளபதிகள், அவருடைய குடும்பத்தை தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தான் மறைந்து போகிறார்கள்.  ஆனால், அப்படி தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமையை அந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய உதவியை மறந்து விட்டவர்கள் இன்னும் நாட்டிலே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் அண்ணாவின் மொழியிலே மறப்போம், மன்னிப்போம்.  

பொதுவுடைமை கருத்துகளைப் பொறுத்தவரை ஜீவா எனக்கு அமைந்த ஆசிரியர்களில் ஒருவர். நானும் அவரும் சண்டை போட்டுக் கொண்டே பொதுவுடைமை இயக்கத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் வளர்த்தவர்கள்.  நான் ஜீவாவைப் பற்றி எழுதியதையோ அல்லது அவர் என்னைப் பற்றி எழுதியதையோ பேசியதையோ நாங்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை. சொல்லப்பட்ட கருத்துகளை மாத்திரம் பெரிதாக எடுத்துக் கொண்டு நாங்கள் கொண்ட நட்பை-ஆழமான நட்பை என்றைக்கும் அகற்றிக் கொண்டதில்லை.  

அரசியல் நாகரிகம்: இருவரும் அந்தக் காலத்தில் அன்பும், உறவும், நட்பும் கொண்டு பழகினோம். 

அது, இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளிடையே மலர்ந்தால் மணம் வீசினால் அந்த நாகரிகத்தை எல்லோரும் பெற்றால் கட்சித் தகராறுகள் வேறு-கொள்கைப் பூசல்கள் வேறு-லட்சிய வேறுபாடுகள் வேறு-இவைகளையெல்லாம் மறந்து விட்டு-நட்பு வேறு என்பதே அரசியல் நாகரிகமாகும். 

இதை, தமிழகத்தைத் தவிர எல்லா இடங்களிலும் உள்ளவர்கள் பெற்று இருக்கிறார்கள்.  தமிழகத்திலேதான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. பெரியாரும், ராஜாஜியும், கிராமங்களிலே சொல்வார்களே ஜென்ம விரோதிகள் என்று-அதுபோல இருந்தாலுங்கூட ராஜாஜி மறைந்த போது, அந்த நிகழ்வுக்காக கண்ணீர் வடித்தவர் பெரியார்.  

அப்படி பல தலைவர்கள் தமிழகத்திலே அரசியல் நாகரிகத்தை வளர்த்து இருக்கிறார்கள். இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை-எந்தக் கடையில் விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய் விட்டது. நசிந்து போய் விட்டது என்றார் முதல்வர் கருணாநிதி.
Previous Post Next Post