தாராசிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; ஆயுள் தண்டனை உறுதி
ஒரிசா மாநிலத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் கிறிஸ்தவ மதத்தை பிரசாரம் செய்வதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கிரகாம் ஸ்டெபின்ஸ் 1999-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி ஒரிசா மாநிலம் கோஞ்சிகார் மாவட்டத்தில் உள்ள மனோகர்ரா என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தனது மகன்கள் பிலிப் (10), திமோதி (6) ஆகியோரையும் அழைத்து சென்றிருந்தார்.
இரவு 3 பேரும் ஜீப்பில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த ஜீப்பிற்கு தீ வைத்தனர். இதில் கிரகாம் ஸ்டெபின்ஸ், குழந்தைகள் பிலிப், திமோதி 3 பேரும் தீயில் கருகி உயிர் இழந்தனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி இந்து அமைப்பின் தலைவர் தாராசிங், மகேந் திரகெம்பராம் உள்பட 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு முதலில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. கோர்ட்டு தாராசிங்குக்கு தூக்கு தண்டனையும், மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து ஒரிசா ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கு தாரா சிங்கின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மகேந்திர கெம்பராமுக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து தாராசிங் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அதே நேரத்தில் சி.பி.ஐ.யும் அப்பீல் செய்தது. அதில் தாராசிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தனர். இதன் விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. நீதிபதிகள் சதாசிவம், சவுகார் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது.
சி.பி.ஐ. தரப்பில் வாதாடிய வக்கீல் தங்காதாரா சிங் குழந்தைகள் உள்பட 3 பேரை கொன்று கொடூரமான குற்றத்தை செய்து உள்ளார். எனவே அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இதில் விசாரணை முடிந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு கூறினார்கள்.
தாராசிங், மகேந்திர கெம்பராம் இருவருக்கும் ஐகோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மிக அரிதான வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படு கிறது. இந்த வழக்கு அப்படிப்பட்டது இல்லை. எனவே குற்றவாளிகளுக்கு ஐகோர்ட்டு வழங்கிய தண்டனையே உறுதி செய்கிறோம் என்று கூறினார்கள்.
Tags:
Crime